கடந்த 27 நாட்களில் 1.04 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.410 கோடியே 15 லட்சத்துக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், பதிவாளர் அ.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லத்தக்கதல்ல என அறிவித்தது. இதனால், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பயிர்க்கடன் வழங்க முடியாமல் போனது.
இதையடுத்து, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் வகையில், புதிய திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, நவம்பர் 23-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், டிசம்பர் 15-ம் தேதி வரை, 4 லட்சத்து 81 ஆயிரத்து 148 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 704 கோடியே 19 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான புதிய திட்டப்படி கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 722 விவசாயிகளுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 668 விவசாயிகளுக்கு ரூ.410 கோடியே 15 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில், 77 ஆயிரத்து 752 விவசாயிகளுக்கு ரொக்கம் செலுத்தாமலேயே ரூ.52 கோடியே 37 லட்சத்துக்கு விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர 66 ஆயிரத்து 969 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையான ரூ.5 கோடியே 86 லட்சம் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 73 பண்ணை பசுமை கடைகள் மூலம் கடந்த 15-ம் தேதி வரை 20 ஆயிரத்து 875 மெட்ரிக் டன் காய்கறிகள், ரூ.59 கோடியே 23 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன. 106 அம்மா மருந்தகங்கள், 187 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் இதுவரை ரூ.430 கோடியே 25 லட்சத்துக்கான மருந்துகள் விற்கப்பட்டுள்ளன.
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூட்டுறவு நிறுவனங்கள், கட்டிடங்கள், தளவாட சாதனங்கள், உரம், அத்தியாவசிய பொருட்கள், நியாயவிலைக்கடை கட்டிடங்கள் என ரூ.98 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.