காவேரிப்பட்டணத்தில் தயாரிக்கப்படும் நிப்பட், வடமாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்குச் செல்கிறது. அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்தும், ஆள் பற்றாக்குறை காரணமாக போதிய அளவு நிப்பட் உற்பத்தி செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
தென்பெண்ணை ஆறு பாயும் காவேரிப்பட்டணம் பகுதியில் பால்கோவா, அரிசி அரவை, முறுக்கு, நிப்பட்(தட்டுவடை) தயாரிப்பில் நேரடியாகவும், மறை முகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நிப்பட் தயாரிப்பில் சிறு தொழிற்சாலை களாக 80-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடுபடு கின்றன.
காவேரிப்பட்டணம் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளில் சுவையான நிப்பட் தயாரிப்பில் 300-க்கும் அதிக மான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தென்னை மரங்கள் உள்ளதால் தேங்காய் மட்டைகளை டன் கணக்கில் வாங்கி அடுப்பு எரிக்க பயன்படுத்துகின்றனர். இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல், கையால் தயார் செய்யப்படும் நிப்பட்டிற்கு தனிச்சுவை என்பதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் ஆர்டர் கிடைப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வங்கிக் கடனுதவி
இதுகுறித்து காவேரிப் பட்டணத்தில் நிப்பட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கூறியதாவது:
தரம், விலை குறைவு ஆகியவற்றால் காவேரிப்பட்டணம் நிப்பட்டுகள் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ரசாயனக் கலப்படம் இல்லாமல் சுத்தமான எண்ணெய், கறிவேப்பிலை, இஞ்சி, கடலை மாவு, கடலை ஆகியவற்றைக் கொண்டு தரமாகவும், உடல்நலத்திற்கு பயனுள்ள பொருட்களுடன் சேர்த்து நிப்பட் தயாரித்து வருகிறோம். வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். வெளிமாநிலங்களுக்கு நிப்பட்களை பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
பேக்கிங் செய்யப்பட்ட நிப்பட் குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை தாக்குப்பிடிக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தாராளமாகக் கிடைப்பதால், நிப்பட் தயாரிப்பை காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மக்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பலர் செல்வதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 3 அடுப்புகளை வைத்து 30 பேருக்கும் மேல் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஒரே அடுப்பில் மட்டுமே வேலை நடக்கிறது.
வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர் கிடைக்கிறது. ஆனால், ஆள் பற்றாக்குறை காரணமாக போதிய அளவு நிப்பட் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை. நிப்பட் தயாரிப்புத் தொழிலை மேம்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வங்கிக் கடன், அரசு மானியம் வழங்கினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.