தமிழகம்

மின் விபத்தை தடுக்க மக்களுக்கு மின்வாரியம் 6 அறிவுரைகள்

செய்திப்பிரிவு

வார்தா புயலுக்குப் பின், மின் விபத்தை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவான வார்தா புயல், நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. கடுமையான காற்று மற்றும் மழையின் காரணமாக மின்சார வாரியம் மின் விநியோகத்தை நிறுத்தியது.

இந்நிலையில், புயலுக்குப் பின் மழைநீர் வடிந்ததும் மின் இணைப்பு வழங்கப்படும் பகுதிகளில், விபத்துகள் ஏதும் நிகழாத வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவுரைக் குறிப்புகள்:

* வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி, டிவி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் இதர மின்சாதனங்கள் மழைநீரில் நனைந்திருந்தால், அவை முழுவதும் உலர்ந்துள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அதன்பின், அருகில் உள்ள எலெக்ட்ரீஷியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதித்த பின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

* ஈரமான மின் அளவிகள் உள்ள பலகைகள், ஸ்விட்ச்கள் மற்றும் மின் கம்பிகளைத் தொடக்கூடாது. தண்ணீர் வடிந்த பின் மின் கம்பிகள் செல்லும் பாதைகளை எலெக்ட்ரீஷி யனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதிக்க வேண்டும்.

* நீரில் நனைந்த மின் கம்பிகள் செல்லும் பாதையில் மின் கசிவு இருந்தால் ஈரமான சுவர்களை தொட வேண்டாம். சுவரில் ஈரம் இருப்பின் உடனடியாக மெயின் சுவிட்ச்சை அணைத்து விட்டு, எலெக்ட்ரீஷியனை அழைத்து சரி செய்ய வேண்டும்.

* மின் கம்பங்கள், பில்லர் பெட்டிகள், தெருவிளக்கு கம்பங்கள் ஆகியவற்றை தொடக் கூடாது.

* மின் கம்பிகள் மீது ஈரத்துணியை உலர்த்த வேண்டாம். மின் கம்பங்களில் துணிகளையோ, கம்பிகளையோ அல்லது வளர்ப்பு பிராணிகளையோ கட்ட வேண்டாம்.

* மின் கடத்திகள் அல்லது மின் கம்பிகள் அறுந்து கிடந்தாலோ, மின் மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் தீப்பொறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT