சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி மற்றும் தாம்பரம் வழித்தடத்தில் மொத்தம் 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருவதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி என பல்வேறு வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றான சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை 16 ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில் உள்ள பல ரயில் நிலையக் கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன. பல ரயில் நிலையங்களில் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. கடற்கரை - வேளச்சேரி வழித்தடம் மற்றும் தாம்பரம் வழித்தடத்தில் மொத்தம் 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதுதவிர, நிர்பயா நிதியின் கீழ், 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 48 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக புதிய ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.