தமிழகம்

ரூ.2.13 கோடி மோசடி செய்த போலீஸ்காரர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி கைவிளாஞ்சேரியைச் சேர்ந்தவர் ஹிதாயத்துல்லா(48). இவர், கடந்த 2009 முதல் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சம்பளப் பிரிவில் வேலை பார்த்து வந்தார். எஸ்எல்எஸ், டிஎல்எஸ், அரியர்ஸ் மற்றும் இதர பில் பட்டியல்களை தயார் செய்து கருவூலத்துக்கு அனுப்பி பணம் பெறும் பணியை செய்து வந்தார்.

அப்போது போலியான பில்களை தயார் செய்தும், சில பில்களை இரண்டு முறை சமர்ப்பித்தும், பில் பணத்தை உரியவர்களிடம் தராமலும் பல்வேறு வகையில் பணம் மோசடி செய்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரைக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் ஹிதாயதுல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் பல்வேறு வகையில் மோசடி செய்த 2 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 202 ரூபாயை, அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹிதாயதுல்லாவை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT