சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.24) மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. பொங்கல் பரிசாக ஏன் ரூ.5,000 தரவில்லை? நாடாளுமன்ற தேர்தல் வரும் காரணத்தால்தான் ரூ.1000 கூட தருகிறார்கள். போனால் போகட்டும் என்று ரூ.1000 தருகிறார்கள். உங்க வீட்டு துட்டயா எடுத்து கொடுக்குறீங்க?
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுகதான் இடம் ஒதுக்கும். அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.