தூத்துக்குடி: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டதில் திமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் உட்பட 13 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சசிகலா புஷ்பா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவரான சசிகலா புஷ்பாவின் வீடு மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, டூவிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) மற்றும் கவுன்சிலர் ஒருவரின் கணவர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சசிகலா புஷ்பா மீது வழக்கு: தூத்துக்குடியில் கடந்த 21-ம் தேதி பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில் பேசியதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வடபாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
142 பேர் கைது: இதனிடையே, வழக்கு பதிவு செய்யப்பட்ட திமுகவினரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி, தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட பாஜகவினர் ஊர்வலமாகச் சென்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உட்பட 142 பேரை கைது செய்தனர்.