நீலகிரி மலை ரயில் பாதையில் பாறைகள் சரிந்ததால், மேட்டுப் பாளையம் - குன்னூர் இடையே நாளை (டிச.17) வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக ‘வார்தா’ புயல் காரணமாக மழை பெய்தது. இதனால், மலை ரயில் பாதையில், மேட்டுப்பாளையத்தை அடுத்த ஹில்குரோவ் கல்லாறு இடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறை சரிந்தது. நேற்று காலையில் இதைக் கண்ட ரயில்வே ஊழியர்கள், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு தகவல் அளித் தனர். இதனால், மலை ரயில் ஹில் குராவ் பகுதியில் நிறுத்தப்பட்டது.
ரயில் மீண்டும் மேட்டுப்பாளை யத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பாறை மற்றும் மண்ணை அகற்றி, தண்டவாளங்களை சீரமைக்க வேண் டும் என்பதால், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நேற்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. குன்னூர் - உதகை இடையே ரயில் வழக்கம்போல் இயக்கப்பட்டது.
தண்டவாளத்தில் குவிந்திருந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மண் மற்றும் பாறை குவியல்களை அகற்றும் பணி நிறைவடையாததால், நாளை (டிச.17) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.