திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்தது.
பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நேற்று இரவு 7 மணிக்கு கோயில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. தொடர்ந்து, 7.45 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டக அபிநயம், வியாக்யானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், திருப்பணியாரம் அமுது செய்யப்பட்டு, கோஷ்டி, திருவாராதனம், சிறப்பு அலங்காரம், தீர்த்தகோஷ்டி ஆகியவை நடைபெற்றன.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து திருநாள் இன்று (டிச.23) தொடங்கி, ஜன.1-ம் தேதி வரை நடைபெறும். இந்த நாட்களில் நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் உற்சவரான நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு ஜன.2-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இதில், ஜன.8-ம் தேதி திருக்கைத்தல சேவை, ஜன.9-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, ஜன.11-ம் தேதி தீர்த்தவாரி, ஜன.12-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறவுள்ளன.
இவ்விழாவையொட்டி நம்பெருமாள் புறப்பாடு மற்றும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழா காலங்களில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.