தமிழகம்

சபரிமலை செல்ல தேனி மாவட்டத்தில் நாளை முதல் ஒருவழிப்பாதை அமல்

என்.கணேஷ்ராஜ்

கம்பம்: தேனி மாவட்டம் வழியே சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது தேனி, கம்பம், கூடலூர், குமுளி வழியே இந்த வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல்(23-12-2022) ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டிச.23-ம் தேதி முதல் ஜன.14-ம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் தேனி, சின்னமனூர், கம்பம் வழியாக கம்பம் மெட்டு சென்று அங்கிருந்து கட்டப்பனா, வாகமண், ஏலப்பாறை, குட்டிக்கானம், பூத்துக்குழி, முண்டக்கயம், எருமேலி, பம்பை வழியாக சபரிமலை செல்லலாம்.

தரிசனம் முடித்து வரும்போது பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி வழியாக கம்பம், தேனி வழியே செல்லலாம். இதுகுறித்து வழிகாட்டவும், தகவல் தெரிவிக்கவும் போக்குவரத்து காவலர்கள் பணியில் உள்ளனர்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT