உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப்படம் 
தமிழகம்

திமுக - 7, அதிமுக - 4: கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

கி.மகாராஜன்

மதுரை: கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் டிச. 19-ல் நடந்தது. இந்த தேர்தலை மாவட்ட நீதிபதி மேற்பார்வையில் நடத்தவும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடக்கோரி அதிமுக கவுன்சிலர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வு, தேர்தல் நடத்தலாம், வாக்கு எண்ணிக்கை நடத்தலாம். ஆனால் மறு உத்தரவு வரும் வரை முடிவு அறிவிக்கக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

இதனிடையே தேர்தல் நாளில் அதிமுக கவுன்சிலர் திருவிகவை, திமுகவினர் கடத்தியதால் தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால் திட்டமிட்டப்படி துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. ஆனால் முடிவு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 12 கவுன்சிலர்களில் 11 பேர் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளருக்கு 7 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 4 வாக்குகளும் கிடைத்துள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், துணைத் தலைவர் தேர்தல் முடிவை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம். அதிமுக கவுன்சிலர் கடத்தல் தொடர்பாக வேடசந்தூர் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையை திண்டுக்கல் ஏடிஎஸ்பி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT