சென்னை: "எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்த போட்டி அதிமுக, ஜெயலலிதா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நால்வர் அணி எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. அதேபோல்தான் ஓபிஎஸ் அணியும் காணாமல் போகும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதை தடுத்துவிட்டதாக கூறுகிறார். அமைச்சர் பதவி வழங்குவதை யாரும் தடுக்கவில்லை. அந்த வேலையே அதிமுகவில் கிடையாது. ஆனால், ஓபிஎஸ் நாங்கள் ஏதோ தடுத்துவிட்டதோபோல் கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் குடும்ப ஆதிக்கத்தின் மீது கொண்டுள்ள பற்று வெளிப்படுகிறது.
எனவே, இதன் தொடர்ச்சியாகத்தான் திமுகவின் பி டீமாக இருந்துகொண்டு, தேவையில்லாத கருத்துகளைக்கூறி கட்சித் தொண்டர்களை குழப்புகின்ற வேலையை செய்து வருகிறார். அதிமுகவில் குழப்பம் பண்ண முடியாது, அனைவரும் தெளிவாகத்தான் இருக்கிறோம். அனைத்து உறுப்பினர்களுமே எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் எதற்கு தனிக்கட்சி தொடங்க வேண்டும். நாங்கள்தான் கட்சி.
ஓபிஎஸ் வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, அவருடைய பலத்தை அவர் காட்டட்டும். நாங்கள் எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும், கட்சி, சின்னம், தலைமைக் கழகம் உள்பட அனைத்துமே எங்களிடம்தான் உள்ளது. எல்லாமே நாங்கள்தான் அவ்வாறு இருக்கும்போது, தனிக்கட்சி என்ற அவசியமே இல்லாத ஒன்று. எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்த போட்டி அதிமுக, ஜெயலலிதா கலாத்தில் ஆரம்பிக்கப்பட்ட நால்வர் அணி எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. அதேபோல்தான் ஓபிஎஸ் அணியும் காணாமல் போகும்.
ஒபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் யாரும் கட்சியில் இருந்து நீக்கவில்லை. அதிமுகவில் சகல அதிகாரமும் பொருந்திய பொதுக்குழு நீக்கியுள்ளது. உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்துள்ளது. அதேபோல், தலைமைக் கழகத்தின் சாவியை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், கட்சியில் இல்லாமல் எப்படி அதிமுக கரை வேட்டியைக் கட்டலாம், கொடியை பயன்படுத்தலாம், லெட்டர் பேட்-ஐ பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ்-க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரந்தரமாக இவற்றை பயன்படுத்தாமல் இருக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.