சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் மேற்கொண்ட ஆய்வு என்பது ஒரு சிறப்பு நிகழ்வாக பதிவாகியிருக்கிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.22) நேரில் ஆய்வு மேற்கொண்டார். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் முதல்வர் ஒருவர் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, 1970-ம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதியும், 1994-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
இன்றைய நிகழ்வில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ரூ.2.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 புதிய அவசர கால வாகனங்கள், மாணவர்களுக்கு ‘மனம்’ திட்டம், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனநல நல் ஆதரவு’ மன்றங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், திறந்து வைக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.