சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் கே.சண்முகநாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி உதவியாளராக இருந்தவர் கே.சண்முகநாதன். காவல்துறையில் நிருபராக பணியாற்றி வந்த அவர், கருணாநிதியின் அழைப்பால் 1969-ம் ஆண்டு உதவியாளரானார். அன்று முதல் கருணாநிதி மறைந்த 2018 வரை உடனிருந்தார். கருணாநிதியின் நிழலாகவே அறியப்பட்ட அவர், கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி தனது 80-வது வயதில் மறைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, சண்முகநாதனின் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த சண்முகநாதன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வின் போது, சண்முகநாதனின் மகன்கள் கே.ச.அருண் மற்றும் பாலாஜி உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கு இருந்தனர்.