பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கோவை விமான நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மீண்டும் தீவிரம்

செய்திப்பிரிவு

கோவை: மத்திய அரசு அறிவுறுத்தலை தொடர்ந்து கோவை விமானநிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு 23 விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, கோவை விமானநிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விமானநிலைய வளாகத்தில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில் பயணிக்க தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சுய உறுதிமொழி அடிப்படையில் பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின்பேரில் பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பயணிகளுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்டவை தொடங்கியுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT