அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது 11-ம் நாள் இறுதிச் சடங்குகள் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்தன. இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மாவட்ட வாரியாகவும், கட்சியின் பல்வேறு அணிகள் சார்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் நேற்றும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். அப்போது, அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து அவர்களிடம் சசிகலா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய நடிகை விஜயசாந்தி, பின்னர் போயஸ் தோட்டத்துக்கு சென்று சசிகலாவை சந்தித்துப் பேசினார்.