தமிழகம்

குப்பை தொட்டியாக மாறி வரும் மதுரை வைகை ஆறு - ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தடுப்புச்சுவர் அமைத்தும் தடுக்க முடியவில்லை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சுற்றுச்சுவர் கட்டப் பட்டுள்ளபோதிலும், ஆற்றுக்குள் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கிறது. கழிவுநீருடன் குப்பையும் சேர்ந்துள்ளதால் ஆறு மாசடைந்து வருகிறது.

அண்மைக் காலமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. அதேநேரம், ஆற்றில் கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க செல்லூர் பந்தல்குடி கால்வாயில் ரூ.2.50 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் குறைந்த அளவிலேயே கழிவுநீர் சத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதனால், ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க முடியவில்லை.

இதனிடையே, வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளையும், தனியார் நிறுவனங்கள் தங்கள் இடத்தில் தேங்கும் குப்பைகளையும் ஆற்றில் கொட்டி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன் பின்பும் குப்பைகள் கொட்டப்படுவது நிற்கவில்லை.

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலித்தீன் பைகள், தற்போது மதுரையில் உள்ள காய்கனி, மளிகை, இறைச்சிக் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளில், இந்த ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பைகளும் கலந்துள்ளன.

ஆற்றில் மாடுகள், ஆடுகள் அதிக அளவில் மேய்ச்சலுக்கு வருகின்றன. இவை பாலித்தீன் பைகளையும் சேர்த்து விழுங்கிவிடுகின்றன. ஆற்றில் சில இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் குப்பைகள் குவிந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

நகரின் மற்ற இடங் களைப்போல், ஆற்றின் கரையோரங்களையும் தினமும் கண்காணிக்கவும், தூய்மைப் பணி மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT