தமிழகம்

உச்ச நீதிமன்ற நிபந்தனைக்கேற்ப ஆணை பிறப்பித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறுக: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் கேட்கின்ற நிபந்தனைக்கு ஏற்ப ஆணை பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக இளைஞர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் பல மாவட்டங்களில் பொங்கல் திருநாளன்று அனைவரும் ஒன்றுகூடி இந்த வீர விளையாட்டை காலங்காலமாக நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

முந்தைய திமுக துணையோடு ஆட்சி புரிந்த காங்கிரஸ் பிறப்பித்த ஆணையின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை ஆணைபிறக்கும் நிலை உருவானது. சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆணையை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு தடைவிதிக்க மறுத்தது.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் சரியான முறையில் அதிமுக அரசு தமிழகத்தின் நியாயங்களை சட்டரீதியாக எடுத்துரைக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு பக்கம் திமுகவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், மறுபக்கம் அதிமுகவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாள் வரும் போது அறிக்கைகள் மூலமாக நாடகம் ஆடி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு 2016 ல் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்து ஒரு சுற்றறிக்கை மூலம் ஆணை பிறப்பித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த உத்தரவில் இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு காரணங்கள் சொல்லப்படவில்லை என்றும், இன்றைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜல்லிக்கட்டு விளையாட்டை வரைமுறைப்படுத்தி காரணங்கள் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உச்ச நீதிமன்றம் கேட்கின்ற நிபந்தனைக்கு ஏற்ப ஆணை பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, வரும் பொங்கல் திருநாளில் இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT