தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுமுக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயனாளிகளுக்கு சமுதாய வாய்ப்பு உள்ள தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறியது, "கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதே போல் நிகழாண்டு கணக்கெடுக்கும் படியும், மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடைநிற்றலுக்கு ஆளாவார்கள் என்பதையும் கண்டறிய உள்ளோம்.
நம்ம ஊர் பள்ளி திட்டத்திற்கு தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இந்த திட்டத்திற்கு முதல் நாளிலேயே ரூ.50 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. நன்கொடையாளர்கள் வழங்கும் பணம் சரியான வழியில், சரியான படி செல்லுகிறது என என்றைக்கு அவர்கள் நம்புகிறார்களோ, அன்று இன்னும் அதிகமாக நன்கொடையை அவர்கள் வழங்குவார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதற்கு உரிய ரசீது வழங்கப்படுகிறது .மேலும், அவர்கள் விருப்பப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டி கொடுத்தால் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்படும். திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி, அதை எப்படி சுமுகமாக தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்த தொகுதி எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்துவார். இளைஞர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தோஷமான விஷயம்" எனத் தெரிவித்தார்.
நிகழ்வில், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் எம் எல் ஏக்கள் துரை. சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், கா.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவி நன்றி கூறினார்.