கிருஷ்ணகிரி: சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு நில அளவீடு செய்ய வலியுறுத்தி, மத்தூர் அருகே சாலை சீரமைப்பு பணியில் பெண்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, நில அளவீடு பணி தொடங்கியது.
போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அருகே குள்ளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாரல்சந்தம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.15 லட்சம் மதிப்பில் நாரல்சந்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு தேவையான ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மற்றும் சிமென்ட் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்ட நிலையில், பட்டா நிலத்தின் வழியாக சிமென்ட் சாலை அமைப்படுவதாக கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நில அளவீடு செய்து சாலைப் பணியை தொடங்க வலியுறுத்தினர்.
இதனால், சாலை அமைக்கு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், நில அளவீடு பணி நடைபெறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் அளவீடு பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, மண் சாலையை சீரமைக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற மத்தூர் வருவாய் அலுவலர் துரைமுருகன், நிலஅளவையர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் சாலை சீரமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தினர். மேலும், உடனடியாக நில அளவீடு பணி தொடங்கப்படும் என உறுதியளித்தனர்.
இதை ஏற்று சாலை சீரமைப்பு பணியை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, வருவாய்த் துறையினர் நில அளவீடு பணியை தொடங்கினர். ரூ.15 லட்சத்தில் நாரல்சந்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.