தமிழகம்

அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு விற்பனை - கிணற்று உப்பு நீரை காய்ச்சிக் குடிக்கும் மக்கள்

செய்திப்பிரிவு

புயல் காரணமாக சென்னை அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.6 முதல் ரூ.8 வரை விற்கப்பட்ட ஒரு குடம் தண்ணீர் தற்போது ரூ.20-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

நேற்று முன்தினம் வீசிய ‘வார்தா’ புயல், சென்னை புறநகர் பகுதிகளான கொரட்டூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் கடந்த ஞாயிறு நள்ளிரவு முதல் தற்போது வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் வயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் செல்லாமல் மின்கம்பத்தில் உயரே செல்கிறது. புயல்காற்றில் பெரும்பாலான வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது. மோட்டார் இயக்க முடியாததால், எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.6 முதல் ரூ.8 வரை விற்கப்பட்ட ஒரு குடம் தண்ணீர் தற்போது ரூ.20-க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் பணம் கொடுத்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை’’ என்றார்.

வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த திவாகரன் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்தடை காரணமாக வீடுகளில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சியும் கடந்த 2 நாட்களாக குடிநீர் விநியோகத்தை நிறுத்திவிட்டது. செல்போன், தொலைபேசி சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால் அவசர உதவிக்குக்கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை’’ என்றார்.

கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூறும்போது, ‘‘சூறைக்காற்று வீசியதால் எங்கள் பகுதியில் பல வீடுகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன. இதனாலும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மக்கள் தங்கள் வீட்டுக் கிணறுகளில் உள்ள உப்பு தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT