தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 71-வது பிறந்த நாள் விழா இன்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நலிந்தோர் நல்வாழ்வு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
''அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
மத்திய பாஜக அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது. அரசை கண்காணிக்கவும் முயற்சியிலும் ஈடுபடக் கூடாது'' என்று கூறியுள்ளார்.