சென்னை: தமிழகத்துக்குள் கேரள அரசு தனது எல்லையை விரிவாக்கி, நில அபகரிப்பு செய்வதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசுவெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசு, டிஜிட்டல் நில அளவீடு திட்டம் - ‘எண்டே பூமி’ என்ற பெயரில், தமிழக - கேரள எல்லை பகுதிகளில் நில அளவீடு செய்து, கேரள மாநில எல்லையை தமிழக எல்லைக்குள் விரிவாக்கி வருகிறது. இதை, தமிழக அரசு அதிகாரிகளும், முதல்வர் ஸ்டாலினும் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
வருவாய் பதிவு, கணக்கெடுப்பு துறைகளின் தகவல்கள் மூலம், ஒரு புதிய டிஜிட்டல் தரவு தளத்தை கேரள அரசு உருவாக்கி வருகிறது. கேரள அரசு அறிவிப்பின்படி, புதிய கணக்கெடுப்பு வரைபட பணி முடிந்ததும், ஒவ்வொரு நபரின் நிலத்தின் அதிகாரப்பூர்வ பதிவு, கேரள எல்லைக்குள் சென்றுவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வயநாடு, காசர்கோடு, ஊட்டி, நாகர்கோவில், தென்காசி, பொள்ளாச்சி, கொடைக்கானல், குமுளி உள்ளிட்ட 13 முக்கிய எல்லை நிர்ணய மண்டலங்களில் தீவிரமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இத்திட்டம் கடந்த நவ.1-ம் தேதி தேனி மாவட்ட எல்லையில் தொடங்கப்பட்ட நிலையில், 7-ம் தேதிதான் ஆலப்புழா மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட கடிதம் மூலம், தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு இதுபற்றி உறுதியாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை தமிழக வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் மறுத்துள்ளார். ஆனால், இவ்வாறு நில அளவை நடப்பதை எல்லை பகுதி விவசாயிகள் உறுதி செய்துள்ளனர். கேரள அரசுதங்கள் எல்லை பலகைகளை மாற்றி அமைப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாகர்கோவில் ஆனைக்கல் பகுதி, தேனி பாப்பம்பாறை பகுதியில், தமிழக அரசை கலந்துபேசாமல், சுமார் 80 ஏக்கர் நிலத்தைதங்களுக்கு சொந்தமானது எனகேரள அரசு கையகப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரள அரசு இவ்வாறு நில அபகரிப்பு செய்வதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில் இருந்து கோழி, மாமிச, மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து தமிழக எல்லைகளில் கொட்டுவது, தமிழக நீர்நிலைகளை பாழ்படுத்துவது, தமிழக கனிம வளங்கள், ஆற்று மணலை கடத்துவது என கேரளாவின் தொடர் அத்துமீறல்கள், தமிழக நலன்களை பாதிக்கின்றன.
இனியும் அதை தொடர தமிழக பாஜக அனுமதிக்காது. விரைவில் எல்லை பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணைக்கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பாஜக அனுமதிக்காது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, இதுபற்றிய வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக எல்லையை மீட்க பாஜக போராட்டம் நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.