சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை சந்தித்தார்.
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் ஆர்எம்.கதிரேசன், தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தர் வி.கீதாலட்சுமி ஆகியோரை ஆளுநர் ரவி தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பல்கலைக்கழக நிர்வாகம், கல்வி சார்ந்த செயல்பாடுகள், வழக்கமானபணிகள், தேர்வு முடிகள், மாணவர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக பல்வேறுதகவல்களை அவர் கேட்டறிந்தார். இதுதொடர்பாக பல முக்கிய அறிவுறுத்தல்களையும் துணைவேந்தர்களுக்கு வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆளுநர், குறைபாடுகள் இருந்தால், அதை சரிசெய்து தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து மற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.