மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ள அந்த ஊர் விழா கமிட்டியினர் போட்டியை நடத்த அனுமதி கோரியும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தும் நேற்று ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ம் தேதி நடக்கிறது. போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறோம்.
இதில், பார்வையாளர்களுக்கான கேலரிகளை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும், வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் குறித்தும் ஆலோசிப்போம். விழாவுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க உள்ளோம் என்றனர்.