மதுரை: தமிழகத்தின் நீளமான 7.5 கி.மீ. தொலைவுக்கு அமையும் மதுரை - நத்தம் பறக்கும் பால கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வரும் ஜனவரியில் பிரதமர் மோடி இப்பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின்கீழ் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018 செப்டம்பரில் தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது.
மதுரையில் இருந்து சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக் கவும், நகர் பகுதியில் போக்குவரத்தை எளிமையாக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது.
268 ராட்சத தூண்கள்: இந்த பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண் கள் இடைய பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் ‘கான்கிரீட் கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.
இதற்காக ஊமச்சிக்குளம் அருகே கான்கிரீட் கர்டர்களை தயாரித்து சரக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டு, ஹைட் ராலிக் கிரேன் மூலம் தூண்கள் மேல் வைத்து கான்கிரீட் மற்றும் இரும்பு மோல்டுகள் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளன. ஜனவரியில் இப்பாலப் பணி முழுமையாக முடிந்து, ஜனவரி அல்லது பிப்ரவரியில் பிரதமர் மோடி நேரில் வந்து பாலத்தை திறந்து வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்இடி பல்புகள்: தற்போது பாலத்தின் மேல் தார்ச் சாலை, சென்டர் மீடியன் அமைக்கும் பணி முடிந்துள்ளது. பாலத்தின் கீழ் பகு தியில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி, தூண்களுக்கு இடையே இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி, சாலையோர நடைபாதை அமைக் கும் பணி நடக்கிறது. இரவை பகலாக்கும் விதமாக பாலத் தின் கீழ் ஒவ்வொரு தூணுக்கும் இடையில் பெரிய எல்இடி பல்பு, தூணைச் சுற்றிலும் திசைக்கு ஒன்று என்ற அடிப்படையில் சிறிய எல்இடி பல்பு கள் பொருத்தும் பணி நடக்கிறது.
மதுரையில் இருந்து நத்தம் வரை நான்குவழிச் சாலையும், அதன் தொடர்ச்சியாக அங்கிருந்து திருச்சி துவரங்குறிச்சிக்கு நான்குவழிச் சாலை யும் அமைக்கப்பட உள்ளது. அதனால், இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும். மதுரையில் இருந்து சென்னை செல் வோரும், இந்த சாலையை பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனக் கூறப்படுகிறது.
நகர் பகுதியில் 30 சதவீதம் பேர்: அதுபோல், திண்டுக்கல் சாலையை திருச்சி சாலையுடன் இணைக்கும் வகையில், வாடிப்பட்டியில் இருந்து சிட்டம்பட்டிக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையும் பயன்பாட்டுக்கு வந்தால் நத்தம் சாலையை மதுரையின் பெரும்பாலான மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் செல்ல, இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவர். நகர் பகுதியில் இருந்து வெளிநகரங்களுக்கு செல்லும் 30 சதவீதம் பேர், நத்தம் பறக்கும் பாலத்தில் செல்ல வாய்ப்புள்ளது. பறக்கும் பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஊமச்சிக்குளம், அலங்கா நல்லூர், சத்திரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.