அனுமன் ஜெயந்தி விழாவுக்காக, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திருச்சி  ரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் தலைமையிலான குழுவினர். 
தமிழகம்

அனுமன் ஜெயந்தி விழாவுக்காக நாமக்கல் கோயிலில் 1,00,008 வடைகள் தயாரிப்பு

செய்திப்பிரிவு

நாமக்கல்: அனுமன் ஜெயந்தி விழாவுக்காக நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் 1 லட்சத்து 8 வடைகள் தயாரிப்பு பணி நேற்று தொடங்கியது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி அன்று சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படுவது வழக்கம்.

இந்தாண்டு வரும் 23-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படவுள்ளது. இதற்காக வடைகள் தயாரிப்பு பணி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

இப்பணியில் திருச்சி ஸ்ரீரங்கம்ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையிலான 32 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ரங்கம் ரமேஷ் கூறியதாவது: அனுமன் ஜெயந்திக்காக 1 லட்சத்து 8 வடை தயாரிக்க 2,025 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், தலா 32 கிலோ மிளகு, சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளது.

இப்பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும். இப்பணி வரும் 22-ம் தேதி காலை நிறைவடையும். பின்னர் கயிற்றில் மாலையாக கோர்க்கும் பணி நடைபெறும் என்றார். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இளையராஜா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT