கோவில்பட்டி: தைத் திருநாளை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள் அமோக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் மஞ்சள் குலைகளுக்கு பிரதான இடம் உண்டு. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள்பார்க்கப்படுகிறது. தைத் திருநாளை கணக்கிட்டு தூத்துக்குடிஅருகே உள்ள தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், சேர்வைக்காரமடம், ஜக்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் கிராமங்களில் மஞ்சள் பயிரிடப்படும்.
இந்த ஆண்டு கடந்த ஆடிமாதமே மஞ்சள் கிழங்குகளை விவசாயிகள் நடவு செய்துவிட்டனர். தற்போது அவை செழித்து வளர்ந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், மஞ்சளை பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, “முன்பு பல நூறுஏக்கரில் இப்பகுதியில் மஞ்சள் விவசாயம் நடந்தது. தற்போது சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துவிட்டது. மஞ்சள் 6 மாத கால பயிர். கடந்த ஆடி மாதம் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து விதை மஞ்சள் கிழங்கு வாங்கி வந்து, பாத்திக்கட்டி தகுந்த இடைவெளி விட்டு விதைத்தோம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் 30 ஆயிரம்மஞ்சள் செடி பயிரிடலாம். விதைப்பில் இருந்து 30 நாட்கள் கழித்து மஞ்சள் செடிகளுக்கு மத்தியில் வளர்ந்து இருந்த களைகளை அகற்றினோம். மஞ்சள் குலைகள் மார்கழி இறுதியில் அறுவடைக்கு தயாராகும். இங்கு பயிரிடப்படும் மஞ்சள் தூத்துக்குடி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன” என்றனர்.