தமிழகம்

தஞ்சாவூர் | திமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் ஓட்டுநர் உட்பட 4 பேர் தஞ்சாவூர் நோக்கி வந்தனர். இதேபோல, தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரு காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த 2 கார்களும் தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் ருக்மணி கார்டன் என்ற இடத்தில் நேற்று மதியம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான கார்களில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டபோது, தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சேட்முகமது(60), காமராஜ் நகரைச் சேர்ந்த திமுக ஊரணிபுரம் நகரச் செயலாளர் சஞ்சய்காந்தி (45) ஆகியோர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

7 பேர் காயம்: இதையடுத்து, 2 பேரின் உடல்களை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரத்தநாடை அடுத்த புதுவிடுதியைச் சேர்ந்த சுந்தர்(48) உயிரிழந்தார் இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT