அடையாற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்கள். (உள்படம்) சாமுவேல். 
தமிழகம்

சென்னை | 18 மணி நேர தேடுதலுக்கு பிறகு அடையாற்றில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: சைதாப்பேட்டை அடையாற்றில் மூழ்கி மாயமான 9-ம் வகுப்பு மாணவன், 18 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை, திடீர் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (14). இவர், சைதாப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் நண்பர்கள் இருவருடன் பள்ளி முடிந்து சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அடையாறு ஆற்றுப்பாலம் அருகே நண்பர்கள் 3 பேரும் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீரோட்டம் திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சுதாரித்துக் கொண்ட சாமுவேலின் நண்பர்கள் கரைக்குதிரும்பினர். ஆனால், எதிர்பாராதவிதமாக சாமுவேல் ஆற்றில் சேறுநிறைந்த பகுதியில் சிக்கிக் கொண்டார். எனினும் நண்பர்கள் இருவரும் சாமுவேலை இழுத்துகொண்டு கரைக்கு செல்லமுயன்றனர். ஆனால் சேற்றில்சிக்கிய சாமுவேல் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுமாயமானார்.

ட்ரோன் மூலம் தேடல்: இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் 2 நாட்களாக படகு மூலமும், ட்ரோன் வழியாகவும் தேடி வந்தனர். இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நேற்று சிறுவன் சாமுவேல் இறந்த நிலையில் அடையாறு ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT