புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசுகிறார் ஓய்வுபெற்ற காவல் துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். 
தமிழகம்

சிலை பாதுகாப்பை அரசிடம் விடுவது அபாயகரமானது: ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கருத்து

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: சிலைப் பாதுகாப்பை அரசையும், அரசு அலுவலர்களையும் நம்பி விடுவது அபாயகரமான செயல் என ஓய்வுபெற்ற காவல் துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு திருடன் கையில் இருந்து, மற்றொரு திருடன் கைக்கு சிலை மாறுவதைத் தடுப்பது மட்டும் போலீஸின் வேலை அல்ல. அந்தச் சிலையை உரிய இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதுதான் முக்கியம். அதற்கேற்ப சிலை திருட்டு வழக்குகளில் வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிவு செய்யாமல் சிலையை மட்டும் கொண்டு வந்தால் அது சரியான நடவடிக்கை அல்ல. ஆன்மிகத்தைச் சந்திர மண்டலத்தில் பேச முடியாது. அரசியல்வாதிகள் முன்னிலையில்தான் பேச முடியும். அரசியல்வாதிகள் கையில்தான் அரசாங்கம் உள்ளது.

2,500 கோயில் சிலைகளை அந்தந்த கோயில்களுக்குக் கொண்டு சேர்ப்பது, 3.50 லட்சம் சிலைகளைக் கண்டறிந்து பதிவு செய்வது, 26 ஆயிரம் கோயில்களில் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் அர்ச்சகர்களே இல்லாத நிலை ஏற்பட உள்ளதை எப்படி எதிர்கொள்வது என்பன உள்ளிட்டவற்றை எதிர் நோக்கி செயல்பட்டு வருகிறோம். சிலைப் பாதுகாப்பை அரசிடமும், அரசு அலுவலர்களிடமும் நம்பி விடுவது அபாயகரமான செயல். எனவேதான் சிவனடியார்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து வருகிறேன்.

அறநிலையத் துறையில் மாதத்துக்கு ரூ.28 கோடி செலவு செய்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிதிலமடைந்துள்ளது. அதைப் புதுப்பிக்கும் பணியை செய்யாமல், கோயிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT