திருச்சி: இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை’ சார்பில் விசிக தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் மணி விழா திருச்சியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி சு.திருநாவுக்கரசர், மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பேசினர்.
பின்னர், திருமாவளவன் பேசியது: இந்தியாவுக்கு மதவெறியர்களால், சனாதன சக்திகளால் மிகப் பெரிய ஆபத்து உருவாகியிருக்கிறது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக, 2024-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எதையும் துணிந்து செய்வார்கள். அவர்களின் செயல் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.
தற்போது, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். இந்த ஆட்சி முடிவதற்குள்ளாக, இதைச் சட்டமாக்க வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் இறுதி இலக்கு, இந்தியா மதம் சார்ந்த நாடாக இருக்க வேண்டும். இந்தியாவின் பெயர் இந்து ராஷ்டிரமாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
காங்கிரஸ்தான் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றில்லை. ஆர்எஸ்எஸ் வலிமை பெறுவது காங்கிரஸுக்கு மட்டும் இழப்பில்லை. ஆர்எஸ்எஸ், பாஜக வலிமை பெற்றால், நாட்டில் சாதிப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை அதிகரிக்கும். சமூக நீதி அழிக்கப்படும். 75 ஆண்டுகளில் உருவான மாற்றங்கள் அனைத்தும் தடைபட்டுப்போகும். எளிய மக்கள் அதிகாரம் பெற முடியாது. ஒட்டுமொத்த நாட்டைப் பாதுகாக்கவே பாஜகவை எதிர்க்கிறோம். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது. இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை தங்களது அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது.
நாடு முழுவதும் தலித், சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழகத்தில் அவர்களால் வாலாட்ட முடியாத நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாக்கியுள்ளது. அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது பெரிதல்ல. அரசியலில் தாக்குப்பிடித்து நிற்பதுதான் பெரிய செயல். தனித்து நின்றால் கட்சியின் தலைவராக எனக்கு பெருமை கிடைக்கும். ஆனால், கட்சி வலிமை பெறாது. எனவேதான், தொடர்ந்து கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ‘அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.