தமிழகம்

கோ.சி.மணி மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: ராமதாஸ்

செய்திப்பிரிவு

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி (87 நேற்றிரவு காலமானார். இந்நிலையில், கோ.சி.மணி மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணி உடல்நலக் குறைவால் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் தீராத துயரமும் அடைந்தேன்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள மேக்கிரிமங்கலம் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கோ.சிவசுப்பிரமணியன் எனும் கோ.சி.மணி இளம் வயதிலேயே அரசியலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை தமது அரசியல் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்ட கோ.சி.மணி கடைசி வரை அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

1965-ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களால் முன்னெடுப்பதற்கு முன்பாகவே 1948-ஆம் ஆண்டில் பண்டாரவாடை தொடர்வண்டி நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு, சிறை தண்டனையையும் அனுபவித்தவர்.

கும்பகோணம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 3 முறை அமைச்சராகவும், இரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் தான் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவரது காலத்தில் தான் கும்பகோணம் நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நகரம் அழகுபடுத்தப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இத்தகைய சிறப்புகளை கொண்ட கோ.சி.மணியின் மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் திமுகவினருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT