தமிழகம்

கலசப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு - உயிருடன் ஒரு சிறுவன் மீட்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமம் அம்பேத்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணதாசன். இவரது மகன்கள் அருள்(10), அஜய்(8) மற்றும் சந்தீப்(7). இவர்களும், அதே கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஹரி கிருஷ்ணன் மகன் ஜீவன்குமாரும்(8) நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கங்கநல்லூர் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது 4 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அதில் அஜய் என்ற சிறுவனை மட்டும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டுள்ளனர். மற்ற சிறுவர்களின் நிலை குறித்து கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்களும்,பெற்றோரும் விரைந்து ஏரிக்கு வந்து சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, 3 சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 சிறுவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த சிறுவர்களான அருள் லாடவரம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், சந்தீப் 2-ம் வகுப்பும், ஜீவன்குமார் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

SCROLL FOR NEXT