தமிழகம்

பெண் சமுதாயத்தின் உரிமைக்கான அடையாள சின்னமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா: தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் புகழாரம்

செய்திப்பிரிவு

பெண் சமுதாயத்தின் உரிமைக் கும், முன்னேற்றத்துக்கும் அடையாள சின்னமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை யொட்டி உயர் நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தின் போது அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:

போற்றுதலுக்கு உரிய மாமனிதர் ஜெயலலிதா. குடிமக்கள் முதல் கட்சித் தொண்டர்கள் வரை அனைவரிடமும் தீராத அன்பு கொண்டவர். கர்நாடகாவில் பிறந்த அவர் தனது இளம்வயதிலேயே தந்தையை பறிகொடுத்தார். மிகவும் இக்கட்டான சூழலில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர். சினிமா, நடனம், பாட்டு, அரசியல், ஆன்மிகம், சேவை, நிர்வாக ஆளுமை என பன்முகங்களை ஒருங்கே கொண்ட தைரியசாலி, திறமைசாலி.

அவரது முதல் விருப்பம் வழக்கறிஞர் ஆவதுதான். ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாவுக்கு சென்றார். திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டினார். எம்.ஜி.ஆர்தான் அவரது குரு, வழிகாட்டி. அவரது அரசியல் வாழ்வு சொந்த விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும் முதல்வராக இருந்து ஏழை மக்களுக்கும், கல்விக்கும், நாட்டுக்கும் அவர் செய்துள்ள அர்ப்பணிப்பு அளப்பரியது. அரசியலில் இருந்த அனைத்து இடர்பாடுகளையும் துணிச்சலாக எதிர்த்துத்தான் அவர் உச்சத்தைத் தொட்டுள்ளார்.

ஏழைகளுக்கான திட்டங்கள்

தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மடிக்கணினி என ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கியுள்ளார். தொடர்ச்சியாக 2-வது முறையாக முதல்வர் அரியணையில் ஏறிய அவர் அந்த வெற்றியை தொடர முடியாமல் மறைந்துள்ளார்.

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. தமிழகம் அவரது தலைமையை இழந்து தவிக்கிறது. கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவரது அரசியல் நிர்வாக ஆளுமையை மட்டுமல்ல, பெண்களின் உரிமைக்கும், முன்னேற்றத்துக்கும் அடையாள சின்னமாக திகழ்ந்தவர் என்பதையும் பிரதிபலிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT