சென்னை: போக்குவரத்து போலீஸாருக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னை போக்குவரத்து காவல் மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 9 இணைந்து 50 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் போக்குவரத்து காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்து பேசியது:
போக்குவரத்து போலீஸார் அதிக நேரம் நின்று கொண்டு பணியில் ஈடுபடுகின்றனர். சாலையில் நின்று கொண்டு பணி செய்வதால், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மாசு உள்ளிட்டவற்றால் உடல் நல பாதிப்புஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால், போக்குவரத்து போலீஸாருக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது.
குறிப்பாக கரோனா தொற்றின்போது காவல்துறையில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீஸார்தான். எனவே, போக்குவரத்து போலீஸார் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், காசநோய், நீரழிவு நோய்,இருதய நோய்க்கான பரிசோதனைகள், காது, மூக்கு தொண்டை, கண் பரிசோதனை, எலும்புகள் சம்பந்தமான பரிசோதனை, பெண்கள் நலம், பல் பிரச்சினைகள், இசிஜி, எக்ஸ்ரே போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன், போக்குவரத்து இணை ஆணையர் ராஜேந்திரன், போக்குவரத்து துணை ஆணையர் சாமேசிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.