நாமக்கல்: மனைவி பெயரில் செலுத்தி வந்த எல்ஐசி தொகையை ஓய்வு பெற்ற காவலருக்கு வழங்காமல் இழுத்தடித்த மல்லசமுத்திரம் எல்ஐசி நிர்வாகத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் பேச்சியண்ணன். இவர் தனது மனைவி கவுரி பெயரில் 2010-ம் ஆண்டு மே மாதம் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் எல்ஐசி கிளை அலுவலகத்தில் 6 மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,545 செலுத்தும் வகையில் ரூ. 1 லட்சத்துக்கு காப்பீடு செய்தார்.
2013-ல் கவுரி இறந்ததையடுத்து, பேச்சியண்ணன் தனக்கு சேர வேண்டிய ரூ.1 லட்சத்தைவழங்கும்படி மல்லசமுத்திரம் எல்ஐசி அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார். எனினும், அத்தொகையை வழங்காமல் எல்ஐசி நிர்வாகம் இழுத்தடித்தது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவரான வக்கீல் செல்வம் மூலம் 2014-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர்குறைதீர் ஆணையத்தில் பேச்சியண்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்துவந்த நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி தமிழ்செல்வி, உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் சமீபத்தில் தீர்ப்பளித்தனர்.
இதன்படி வழக்கு தொடர்ந்த பேச்சியண்ணனுக்கு, மல்லசமுத்திரம் எல்ஐசி அலுவலக மேலாளர், நாமக்கல் முதுநிலை மேலாளர், மண்டல மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோர் பாலிசி தொகைரூ. 1 லட்சத்தை வழக்கு தாக்கல் செய்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
மேலும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து பேச்சி யண்ணனுக்கு வழங்க வேண்டும். தவறினால் 12 சதவீதம்வட்டியுடன் மன உளைச்சல் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து இரட்டிப்பாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், என தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.