கோப்புப் படம் 
தமிழகம்

சென்னையில் 73% கடைகளில் 2 வகையான குப்பைத் தொட்டிகள்: மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 73 சதவீத கடைகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை தவிர்த்து மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளை எளிதில் தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 94,523 கடைகளில் 69,001 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சராசரியாக 73% கடைகளில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், 100 சதவீதம் அனைத்து கடைகளிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை உடனடியாக வைக்க அறிவுறுத்தப்பட்டு, ரூ.1,18,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும் என்றும், நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT