தமிழகம்

சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: காவல் கோரிய சிபிஐ மனுவும் நிராகரிப்பு

செய்திப்பிரிவு

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ முதன்மை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதேபோல இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐயின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 8-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி ரொக்கப்பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை 24 நாட்களில் சட்டவிரோதமாக மாற்றியதாக சிபிஐ சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனீவாசலு மற்றும் அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், முத்துப்பட்டிணம் ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த 5 பேருக்கும் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடும் ஆட்சேபம்

ஏற்கனவே இம்மனு விசாரணைக்கு வந்தபோது, சேகர் ரெட்டி தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இதற்கு சிபிஐ தரப்பு அரசு வழக்கறிஞர் என்.நாகேந்திரன் கடும் ஆட்சேபம் தெரிவி்த்தார். அப்போது சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணம் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டது? என்ற நீதிபதியி்ன் கேள்வி்க்கு இருதரப்பும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு நடந்தது. அப்போது இருதரப்பிலும் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்து உயர் நீதிமன்றம்?

இதேபோல 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களையும் நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து இருதரப்புமே உயர் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT