தமிழகம்

ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டுத் தர வேண்டும்: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் அந்த வீட்டிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தனது பொருட்களை மீட்டுத் தரக் கோரி மதுவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி(45). தி.நகர் நியூ கிரி சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரது வழக்கறிஞர் மூலம் புகார் மனு ஒன்றை அண்மையில் அளித்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனி, 2-வது குறுக்குத் தெருவில் மதுவந்திக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று இருந்தது. அவர் 2016-ம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றிலிருந்து வாங்கிய கடனுக்காக அவர் கட்ட வேண்டிய ரூ.1 கோடியே 21 லட்சத்து 30,867 பணத்தைக் கட்ட தவறியதால் அவரது ஆழ்வார் பேட்டை வீட்டைச் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றம் மூலம் சீல் வைத்து சாவியை பெற்றுக்கொண்டது.

மேலும், பூட்டி சீல் வைக்கப்பட்ட வீட்டிலிருந்து பொருட்களை ஒரு மாதத்துக்குள் எடுக்க மதுவந்திக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர் பொருட்களை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டில் இருந்த பொருட்களை பைனான்ஸ் நிறுவனம் தங்களுக்குச் சொந்தமான இடத்துக்கு மாற்றி வைத்ததாம். இந்நிலையில், மதுவந்தியிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீட்டை பைனான்ஸ் நிறுவனம் வேறு ஒருவருக்கு கடந்த 14-ம் தேதி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்து கோபம் அடைந்த மதுவந்தி, “பைனான்ஸ் நிறுவனம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தான் ஊரில் இல்லாததை அறிந்து, பைனான்ஸ் நிறுவனம் வீட்டை ஏலம் விட்டுள்ளது.

தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமா சங்கர் மற்றும் 10 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள எனது பொருட்களை மீட்டுத் தர வேண்டும்” எனப் புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மதுவந்தியிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீட்டை பைனான்ஸ் நிறுவனம் வேறு ஒருவருக்கு கடந்த 14-ம் தேதி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது

SCROLL FOR NEXT