தமிழகம்

பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வுமேற்கொண்டார். துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஜன. 2-ம் தேதி நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பார்த்தசாரதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதியோருக்கு பேட்டரி கார்வசதி, சக்கர நாற்காலி வசதிஏற்பாடு செய்யப்படும். பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்துக்கு ரூ.200 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரூ.100-ஆக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களின் பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டு படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணம் குறைக்கப்படும்.

கிராமங்களில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட 2,500 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள, தலா ரூ.2 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்க உள்ளார். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

SCROLL FOR NEXT