தமிழகம்

திருநெல்வேலி | சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நிழற்குடை பாழ்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்புறம் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பாழடைந்து காட்சியளிக்கிறது.

திருநெல்வேலி மாநகரில் ரூ.895.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. அதில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள் மற்றும் மக்களின் சிரமங்களைப் போக்கி அவர்களை நிம்மதியாக வாழவைக்கும் திட்டங்கள் பெரும்பாலும் இல்லாதது குறித்த விமர்சனங்கள் கடந்த பல மாதங் களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

அவ்வாறு மக்களுக்கு பயன்படாமல் நிதியை வீணடித்து செயல்படுத்திய திட்டத்தில் ஒன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள். பயணிகள் பயன்படுத்த முடியாத இடத்திலும், பேருந்துகள் நின்று செல்லாத இடத்திலும் ஒருசில பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, தற்போது வெறும் காட்சிப்பொருளாக இருக்கின்றன.

இதுபோல் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டுக்காக செயல்படுத்தப் படும் பல திட்டங் களும் பயன்பாடின்றி இருக்கின்றன. அந்த வகையில் திருநெல்வேலி அபிஷேகப் பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிலின் அருகே அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நவீன நிழற்குடையும் 3 ஆண்டுகளிலேயே பாழடைந்து இருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2018-2019-ம் ஆண்டில் உள்ளூர் பகுதி திட்ட நிதியின் கீழ், முன்னாள் எம்.பி விஜிலா சத்தியானந்த் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்த நிழற்குடை கட்டப்பட்டிருந்தது.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிழற்குடையில் தற்போது இருக்கைகளே இல்லை. பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு எவ்விதத்திலும் இந்த நிழற்குடை பயன்படாமல் பாழடைந்துவிட்டது. உள்ளூர் பகுதி திட்டம் என்ற பெயரில் நிதி விரயமாக்கப்பட்டதற்கு இது ஒரு சாட்சி.

சுந்தரனார் பல்கலைக்கழகம் வழியாக திருநெல்வேலி- தென் காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை தெரிந்தும் இப்படியொரு நிழற் குடையை அமைத்தது ஏன், இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தது ஏன்? என்று பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.

SCROLL FOR NEXT