வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து விருதம்பட்டு செல்லும் காட்பாடி சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்க இயந்திரம் கொண்டு சுரண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

வேலூர் - காட்பாடி சாலையில் தொடரும் விபரீதம்; விபத்தை ஏற்படுத்தும் சாலை பணிகள்: வாகன ஓட்டிகள் திணறல்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர்- காட்பாடி சாலையில் விருதம்பட்டு பகுதியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணி தாமதமாவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

வேலூர்-காட்பாடி சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கி விருதம்பட்டு குமரன் மருத்துவமனை வரைஉள்ள சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, புதிய பாலாறு பாலத்தில் தொடங்கி விருதம்பட்டு வரை சாலையின் இரண்டு பக்கமும் பள்ளம் தோண்டி பலப்படுத்தும் பணி கடந்த இரண்டு மாதங் களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் ஒரு பகுதியாக விருதம்பட்டு பகுதியில் சிறு பாலமும் அகலப்படுத்தியுள்ளனர்.

தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. சாலை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என கூறப்படுகிறது. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த வாரம் இறுதியில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த சாலையில் கீறல்கள் அமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க திட்டமிட்டனர். புதிய பேருந்து நிலையம் அருகிலும் இதேபோல் சாலையில் கீறல்கள் போட்டுள்ளனர். இதற்காக இயந்திரங்கள் மூலம் சாலையில் கீறல்கள் போடப்பட்ட நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணியை திடீரென கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதனால், புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி விருதம்பட்டு வரையிலான சாலையில் செல்ல முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். சாலையில் போடப்பட்டுள்ள கீறல்களால் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களும் அருகில் செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு சிலர் விபத்தில் சிக்கி சிறு, சிறு காயங்களுடன் தப்பிச் செல்கின்றனர். ஒரு நாளில் முடிக்க வேண்டிய பணிக்காக கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவது வாகன ஓட்டிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘சாலை விரிவாக்கப் பணியை முடித்து தார்ச்சாலை அமைக்கலாம் என முடிவானது. அதற்குள் மழை குறுக்கிட்டதால் பணிகள் தடைபட்டுள்ளன. ஓரிரு நாளில் இந்த பணியை முடித்துவிடுகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT