மதுரை: குட்கா வழக்கில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் வழங்க நிபந்தனை விதித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி விஜயகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.
நிபந்தனைகள் விதிப்பு: அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மீண்டும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.