மழையில்லை; வைகை அணைக்கு நீர்வரத்தும் இல்லை; பல மாதங்களாக தண்ணீரின்றி வெடித்துப் பாளமாகக் கிடக்கும் கண்மாய்கள், குளம், குட்டைகள். முதல்போக சாகுபடிக்கே தண்ணீர் இல்லாத நிலையில் பலநூறு ஏக்கரில் விளை நிலங்களை தரிசாகப் போட்டிருக்கிறார்கள் ஆண்டிபட்டி விவசாயிகள்.
கடந்த ஜூன் மாதம், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழையில்லாத காரணத்தால் கூடுதலாக 200 கன அடி என, கடந்த ஒரு மாதமாக 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பருவமழை பெய்து வருகிறது.
ஆனால், ஆண்டிபட்டி பகுதியில் கடந்த 25 நாள்களுக்கு முன்பு இரண்டு நாள் சாரல் மழை பெய்ததோடு சரி.. அதற்குப் பிறகு மழையில்லை. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழையில்லாத காரணத்தால், கடந்த 10 நாட்களாக அணைக்கு நீர்வரத்து இல்லை, அதனால் 71 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 25.32 அடியாகக் குறைந்து விட்டது. குடிநீருக்காக அணையிலிருந்து சுமார் 40 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிபட்டியில் தரிசாக நிலங்கள்
வைகை அணை மற்றும் மழைநீரை முதல்போக நெல் சாகு படிக்கு எதிர்பார்த்து காத்திருந்த ஆண்டிபட்டி, புள்ளிமான் கோம்பை, தர்மத்துபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயி களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில், முதல்போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் அஞ்சி விவசாய நிலங்களை தரிசாக விட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி விவசாயி சின்னராஜ் கூறும்போது, வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை, பருவ மழையும் கைவிட்டு விட்டது. விவசாயிகள் சிலர் பாசன வசதிக்காக கடன் வாங்கி விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணற்றை அமைத்துள்ளனர்.
ஏழை, எளிய விவசாயிகள் மழையைத்தான் நம்பி உள்ளனர். மழையில்லாத காரணத்தால் முதல்போக சாகுபடிக்கு தயக்கம் காட்டி பல விவசாயிகள் பல நூறு ஏக்கர் விளைநிலங்களை தரிசாக போட்டுள்ளனன.
பெரியாறு அணையில் இருந்து, கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் வைகை அணைக்கு தண்ணீர் வரும். அதன் பின்னர்தான் இரண்டாம் போக சாகுபடி செய்வது குறித்து யோசிக்க முடியும் என்றார்.
ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதாலும், பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், நெல் நடவுப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.