தமிழகம்

பணமதிப்பு நீக்கம் விவகாரம்: எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற 500 பேர் கைது - அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் செய்து 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நிலைமை சீராகாததைக் கண்டித்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியைச் சேர்ந்த சுமார் 500 பேர், ஆயிரம்விளக்கு எஸ்பிஐ வங்கி கிளையை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், கடந்த சில வாரங்களாக வங்கி, ஏடிஎம்களில் போதிய அளவில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நிலைமை இன்னும் சீராகாததைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அண்ணா மேம்பாலத்தில் கண்டன பதாகைகள் ஏந்தி பேரணியாக வந்தனர். மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே வரும்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்குள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் த.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த நவம்பர் 8-ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்பு பணம் ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அடுத்த 50 நாட்களில் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என உறுதி கூறினார்.

தற்போது 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த பிரச்சினை தீராமல் இருக்கிறது. தாங்கள் வைத்திருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுவது தொடர்கிறது.

எனவே, மத்திய அரசை கண் டித்து முதல்கட்டமாக ஆயிரம் விளக்கு எஸ்பிஐ வங்கி கிளையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம். இந்த விவகாரத்தில் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

இந்தப் போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT