சென்னை: பொங்கலுக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழு அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.15) கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 88 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் 285 பேருந்துகள் வந்து செல்ல முடியும். எந்த அளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக பணிகளை மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆனால், பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம். புயல், மழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் கோரிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.