முன்னாள் தமிழக தலைமைச் செயலர் மகன் விவேக் விசாரணைக்கு நேரில் ஆஜராஜ வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சேகர் ரெட்டிக்கு எதிரான வரி ஏய்ப்பு விசாரணை தொடர்பாக விவேக் பப்பிசெட்டிக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
விவேக்கிற்கு எதிராக அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த பிறகு டிசம்பர் 21 அன்று விசாரணைக்கு வருமாறு முதலில் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விசாரணை அலுவலரிடம் விவேக் அப்போது, தன் மனைவி உடல் நிலை சரியானவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
சேகர் ரெட்டியை சிபிஐ கடந்த வாரம் கைது செய்தது.
முன்னதாக அன்றைய ரெய்டின் போது “ரூ.17 கோடி கணக்கில் வராத பணம் பற்றி விவேக் ஒப்புக் கொண்டதாக” வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்தனர்.
கடந்த வாரம் ரெட்டி தொடர்பாக விவேக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் என்று 15 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது புதிய நோட்டுகளில் ரூ.30 லட்சம் ரொக்கமும் 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ரூ.142 கோடி பெறுமான கணக்கில் வராத சொத்துக்களும் ரூ.34 கோடி புதிய நோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.