தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் இலக்கே பாளையத்தில் போராட்ட குழு அலுவலகத்தை திறந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள். 
தமிழகம்

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு: 17 இடங்களில் போராட்டக் குழு அலுவலகம் திறப்பு

செய்திப்பிரிவு

கோவை: அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 17 இடங்களில் போராட்டக் குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் விளைநிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று 17 இடங்களில் போராட்டக் குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

இது குறித்து ‘நமது நிலம் நமதே’ விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் குமார. ரவிக்குமார் மற்றும் செயலாளர் ராஜா கூறியதாவது: தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி எங்கள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்து போராடி வருகிறோம். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கி மொத்தம் 17 இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

நிலம் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டாலோ, வெளியாட்கள் நடமாட்டம் இருந்தாலோ விவசாயிகள் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரச்சினை ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று விவசாயிகளுக்கு உதவி செய்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிரச்சார நடைபயணம்: விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரச்சார நடை பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் மூலம் பயன்படும் விவசாய நிலங்களை பாதுகாத்திட வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வரும் 18ம் தேதி பிரச்சார நடைபயணம் நடக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் இந்த பிரச்சார நடைபயணம் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT