தங்களுடைய நிலத்தை ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைக்காக வழங்கிய கோவையைச் சேர்ந்த தந்தை, மகளுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். 
தமிழகம்

கோவை | ஏழைகள் வீடு கட்டுவதற்காக 58.5 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை, மகள்

செய்திப்பிரிவு

கோவை: தங்களுடைய 58.5 சென்ட் நிலத்தை ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைக்காக வழங்கிய கோவையைச் சேர்ந்த தந்தை, மகளுக்கு கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு தெரிவித்தார்.

கோவை கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 720 பயனாளிகளுக்கு ரூ.4.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, “ஒரு கிராமத்துக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற வகையில் தான் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், இன்று வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜக்கார்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்ற இளைஞர் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று இயற்கை வேளாண்மை முறையில் விவசாயத்தை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவரைப் போன்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் கிராமத்தில் உருவாகவேண்டும். மேலும், இப்பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவருடைய மகள் ஸ்ரீநிதி ஆகியோர் தங்களுடைய 58.5 சென்ட் நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு, வீட்டுமனைக்காக தானமாக வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இம்முகாமில் பொள்ளாச்சி சார்ஆட்சியர் பிரியங்கா, கிணத்துகடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT